Monday 24 June 2013

இயற்கை கவிதைகள்



இயற்கை
நீல வானம் அதில் பூத்திடும்
பகல் இரவு விண்மலர்கள்
பசுமை போர்த்திய மலைகள்
சரிந்து விழுந்த பள்ளத்தாக்குகள்
சமவெளிகள் பாலைவன சோலைகள்
இங்கு பூத்து குலுங்கிடும் வயல்வெளிகள்
காயத்திடும் மரங்கள் கனிந்திடும் பழவகைகள்
காற்றை மயக்கும் நறுமணங்கள்
உயர் வானில் உயர விரிந்திடும்
பறவைகள் ஓடிவிளையாடும் உயிரினங்கள்
கரைக்கான கடல் அதில் எழுதிந்திடும்
அலைகள் நீந்திடும் மீன்வகைகள்
விழுந்திடும் அருவி ஓடிடும் ஆறு
தாகம் தணித்திடும் நீர் நிலைகள்
சுடுகாற்று குளிர்தென்றல் சூறாவளி
அடைமழை சற்றன்டு மாறிடும் வானிலை
இவை ஒவ்வொன்றின் ஒலியில்
மெல்லிய காற்றில் ஒலித்திடும் இன்னிசை
அனைத்தும் அற்புதம் அதில் அன்பு இதயம்
கொண்ட மனிதனின் படைப்பு ஒரு மகத்துவம்
இவ்வுலகம் இங்கு நாம் காணும்
ஒவ்வொன்றும் பிரமிப்பு - அவன்
ஈசன் தன் உயிர் மூச்சில் வரைந்து
வாழ்ந்திடும் உன்னத உயிர்வோவியம்

விதை
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்
மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்
மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணை காண விருச்கமாய் எழுந்திட்டாய்
தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்பித்தாய்

பசுமை தோழி
அன்பு தோழி ஆறே - நீ
கார்மேகங்கள் கலைந்து
பாசமழையாய் விழுந்து
அழகு அருவியாய் எழுந்து
புதுப்புனல் பொங்கி பாய்ந்து
ஓடையாய் நடைகட்டி
அகன்ற ஆறாய் எடைக்கட்டி
தேரோடும் உன் பவனி
வேரோடிய உயிர்களெல்லாம்
பூபூத்து காய்கனிந்து பாரெல்லாம்
பார்த்தாயா பசுமை கொண்டாட்டம்

நீ விரியும் கரையெல்லாம்
மாந்தரின் திருவிழா திருக்கூட்டம்
தூய மலர்கள் தூவிட்டு - உன்னை
வணங்கி மகிழ்ந்தே வரவேற்பர்
உன்னில் பொங்கிடும் வெள்ளமதில்
தூய்மை உள்ளமதில் - எங்கள்
ஊரும் ஊராரும் தூயமையாவோம்
குளம் குட்டைகள் நிரம்பிட
கிணறுகள் ஊற்றெடுக்க - எங்களின்
வறுமை அகன்று வாழ்வு பூத்திடும்
நில்லாமல் ஓடிடும் பசுமை தோழி - நீ
இகமெங்கும் சென்றிடு மகிழ்ச்சி தந்திடு

மலர்களே வாழ்த்துகள்
காலையில் விரிந்து
மாலையில் வதங்கும் மலர்களே
நம் வாழ்க்கை ஒரு நாள்தானே
என்ற சோகம் கொள்ளாமல்
ஒரு நாளே பெரும் யோகம்
இதுவே எங்களுக்கு போதும்
பூத்து குலுங்குவோம் நாள்பொழுதும்
என்றே மனநிறைவு மகிழ்ச்சியில்
புன்னகை இதழ்களை அகல விரித்து
நறுமணம் வீசிடும் பூக்களே
மகிழ்ச்சி வாழ்த்துகள் மலருங்கள்
உங்களின் நம்பிக்கையில் நானும்
புது வாழ்க்கை பாடம் பயின்றேன்


திங்களின் தீண்டல்
நாளும் பிறையாய்
வானில் வளர்ந்து
ஆபரண பேரழகாய்
தங்க தாமரையாய்
மலர்ந்து விண்ணில் விரிந்து
பொன்னொளி வீசும் முழுமதி
கண்கள் விரிந்து கண்டிருக்க - என்
கருவிழிக்குள் விழாகோலம்
இந்த இரவு சூரியனின்
குளிர் தென்றல் அவனியில்
பவனிவர என் மேனி
என்ன தவம் செய்ததோ
தித்திக்கும் திங்களே
அன்பு வெண்மதி அழகு வெண்ணிலா
பூமிக்கு வந்து ஒருமுறை
என்னை தீண்டிச் செல்வாயா
உன் தீண்டல் ஒன்றே
என் வாழ்வின் வேண்டலாகும்

கதிரவன்
காரிருளை கதிரவன் எரித்து
மரகதவொளி வெள்ளத்தில்
கிழக்கே முகம் பதித்து
உதய சூரியனின் எழுந்தேற்றம்
இரவொன்றை பகலாக்கி
நம்பிக்கை ஒளியேற்றி
புதிய நாளை புலரவைக்கும்
ஆதவனின் அருட்சுடர்

வாழ்வில் இருளகற்றி
இகமெங்கும் ஒளிவீசி
உற்சாகமும் உழைப்பும்
பகலவன் நல்கிடும் பரிசு
காலக் கடிகாரமாய்
பூமியெங்கும் சுழன்று
உயிரினங்கள் வாழ்ந்திட
வழிகாட்டும் வானவன்


இதய வீணை
இசைக்கு இயற்கையும்
மயங்கும் இசையின் ஓசைக்கு
மேகமும் கலைந்திடும்
தூவானமாய் நின்று மெல்லவே தூவிடும்
புதையுண்ட விதையும் விதையுண்டு
விருச்சகமாய் எழுந்திடும்
மலர்ந்திட காத்திட்ட மொட்டுக்கள்
இசைத்தட்டுக்கள் பட்டவுடன்
இன்பமாய் இதழ்களை விரித்திடும்
காற்றலை மோதிடும் இடமெல்லாம்
மெல்லிசை எழுந்திடும் - நம்
இமைகள் மெல்ல மூடியே
உயிர் மூச்சோடு கலந்து
இதய வீணையை இசைத்து
இணையில்லா இன்பம் சுரந்திடும்
இசையின் மகிழ்ச்சி களிப்பில்
கவலைகள் அனைத்தும் கரைந்திடும்
இறைவன் மொழிந்திடும் அமுதம் - நம்

செவிகளில் இன்னிசை மழையாய் பொழிந்திடும்

No comments:

Post a Comment