Monday 24 June 2013

இயற்கை கவிதைகள்



இயற்கை
நீல வானம் அதில் பூத்திடும்
பகல் இரவு விண்மலர்கள்
பசுமை போர்த்திய மலைகள்
சரிந்து விழுந்த பள்ளத்தாக்குகள்
சமவெளிகள் பாலைவன சோலைகள்
இங்கு பூத்து குலுங்கிடும் வயல்வெளிகள்
காயத்திடும் மரங்கள் கனிந்திடும் பழவகைகள்
காற்றை மயக்கும் நறுமணங்கள்
உயர் வானில் உயர விரிந்திடும்
பறவைகள் ஓடிவிளையாடும் உயிரினங்கள்
கரைக்கான கடல் அதில் எழுதிந்திடும்
அலைகள் நீந்திடும் மீன்வகைகள்
விழுந்திடும் அருவி ஓடிடும் ஆறு
தாகம் தணித்திடும் நீர் நிலைகள்
சுடுகாற்று குளிர்தென்றல் சூறாவளி
அடைமழை சற்றன்டு மாறிடும் வானிலை
இவை ஒவ்வொன்றின் ஒலியில்
மெல்லிய காற்றில் ஒலித்திடும் இன்னிசை
அனைத்தும் அற்புதம் அதில் அன்பு இதயம்
கொண்ட மனிதனின் படைப்பு ஒரு மகத்துவம்
இவ்வுலகம் இங்கு நாம் காணும்
ஒவ்வொன்றும் பிரமிப்பு - அவன்
ஈசன் தன் உயிர் மூச்சில் வரைந்து
வாழ்ந்திடும் உன்னத உயிர்வோவியம்

விதை
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்
மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்
மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணை காண விருச்கமாய் எழுந்திட்டாய்
தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்பித்தாய்

பசுமை தோழி
அன்பு தோழி ஆறே - நீ
கார்மேகங்கள் கலைந்து
பாசமழையாய் விழுந்து
அழகு அருவியாய் எழுந்து
புதுப்புனல் பொங்கி பாய்ந்து
ஓடையாய் நடைகட்டி
அகன்ற ஆறாய் எடைக்கட்டி
தேரோடும் உன் பவனி
வேரோடிய உயிர்களெல்லாம்
பூபூத்து காய்கனிந்து பாரெல்லாம்
பார்த்தாயா பசுமை கொண்டாட்டம்

நீ விரியும் கரையெல்லாம்
மாந்தரின் திருவிழா திருக்கூட்டம்
தூய மலர்கள் தூவிட்டு - உன்னை
வணங்கி மகிழ்ந்தே வரவேற்பர்
உன்னில் பொங்கிடும் வெள்ளமதில்
தூய்மை உள்ளமதில் - எங்கள்
ஊரும் ஊராரும் தூயமையாவோம்
குளம் குட்டைகள் நிரம்பிட
கிணறுகள் ஊற்றெடுக்க - எங்களின்
வறுமை அகன்று வாழ்வு பூத்திடும்
நில்லாமல் ஓடிடும் பசுமை தோழி - நீ
இகமெங்கும் சென்றிடு மகிழ்ச்சி தந்திடு

மலர்களே வாழ்த்துகள்
காலையில் விரிந்து
மாலையில் வதங்கும் மலர்களே
நம் வாழ்க்கை ஒரு நாள்தானே
என்ற சோகம் கொள்ளாமல்
ஒரு நாளே பெரும் யோகம்
இதுவே எங்களுக்கு போதும்
பூத்து குலுங்குவோம் நாள்பொழுதும்
என்றே மனநிறைவு மகிழ்ச்சியில்
புன்னகை இதழ்களை அகல விரித்து
நறுமணம் வீசிடும் பூக்களே
மகிழ்ச்சி வாழ்த்துகள் மலருங்கள்
உங்களின் நம்பிக்கையில் நானும்
புது வாழ்க்கை பாடம் பயின்றேன்


திங்களின் தீண்டல்
நாளும் பிறையாய்
வானில் வளர்ந்து
ஆபரண பேரழகாய்
தங்க தாமரையாய்
மலர்ந்து விண்ணில் விரிந்து
பொன்னொளி வீசும் முழுமதி
கண்கள் விரிந்து கண்டிருக்க - என்
கருவிழிக்குள் விழாகோலம்
இந்த இரவு சூரியனின்
குளிர் தென்றல் அவனியில்
பவனிவர என் மேனி
என்ன தவம் செய்ததோ
தித்திக்கும் திங்களே
அன்பு வெண்மதி அழகு வெண்ணிலா
பூமிக்கு வந்து ஒருமுறை
என்னை தீண்டிச் செல்வாயா
உன் தீண்டல் ஒன்றே
என் வாழ்வின் வேண்டலாகும்

கதிரவன்
காரிருளை கதிரவன் எரித்து
மரகதவொளி வெள்ளத்தில்
கிழக்கே முகம் பதித்து
உதய சூரியனின் எழுந்தேற்றம்
இரவொன்றை பகலாக்கி
நம்பிக்கை ஒளியேற்றி
புதிய நாளை புலரவைக்கும்
ஆதவனின் அருட்சுடர்

வாழ்வில் இருளகற்றி
இகமெங்கும் ஒளிவீசி
உற்சாகமும் உழைப்பும்
பகலவன் நல்கிடும் பரிசு
காலக் கடிகாரமாய்
பூமியெங்கும் சுழன்று
உயிரினங்கள் வாழ்ந்திட
வழிகாட்டும் வானவன்


இதய வீணை
இசைக்கு இயற்கையும்
மயங்கும் இசையின் ஓசைக்கு
மேகமும் கலைந்திடும்
தூவானமாய் நின்று மெல்லவே தூவிடும்
புதையுண்ட விதையும் விதையுண்டு
விருச்சகமாய் எழுந்திடும்
மலர்ந்திட காத்திட்ட மொட்டுக்கள்
இசைத்தட்டுக்கள் பட்டவுடன்
இன்பமாய் இதழ்களை விரித்திடும்
காற்றலை மோதிடும் இடமெல்லாம்
மெல்லிசை எழுந்திடும் - நம்
இமைகள் மெல்ல மூடியே
உயிர் மூச்சோடு கலந்து
இதய வீணையை இசைத்து
இணையில்லா இன்பம் சுரந்திடும்
இசையின் மகிழ்ச்சி களிப்பில்
கவலைகள் அனைத்தும் கரைந்திடும்
இறைவன் மொழிந்திடும் அமுதம் - நம்

செவிகளில் இன்னிசை மழையாய் பொழிந்திடும்

Friday 21 June 2013

தமிழ் மொழி கவிதைகள்

என் கவிதை  

உள்ளமதில் வெள்ளமென
எழுந்திட்ட எண்ணங்களை
கருத்தாய்ந்து பகுத்தாய்ந்து
பாரெல்லாம் வழங்கிடவே
அன்னைத்தமிழ் அருள்வேண்டி
தமிழ்புலவன் நடைநின்று
தெளிமிகு சிறப்புடனே
வடித்திடவே முனைந்திட்டேன்

சொல்லொன்று தீட்டிடவே
ஓராயிரம் நொடிபொழுது
செலவழித்து இரவெல்லாம்
விழிகளை சேகரித்து
நாளெல்லாம் மூச்சுவொன்றே
உணவாக சுவாசித்து
தீட்டிட்ட தீந்தமிழ் திரவியம்
நான் வரைந்திட்ட கவி ஓவியம்

தமிழ் மொழி  

இறைவனோடும் இவ்விகத்தோடும்
இணைந்து தோன்றிட்டு
காலங்களை கடந்து வாழ்ந்திடும்
பண்பட்ட பழமை மொழி

அடர்காடுகளில் கரடுமலைகளில்
அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்
இயற்கையோடு இணைந்து உறவாடி
வடித்திட்ட இயற்கை மொழி


சொல்யொன்றை உயிர் ஓவியமாய்
யுகமதில் வாழும் காவியமாய்
சிந்தனையை கடைந்து படைத்து
தீட்டிட்ட தொன்மை மொழி

தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து
செழுத்திட்ட செம்மொழி

தெலுகு கன்னடம் துளு மலையாளம்
என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்
தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது
உயர்தனி தமிழ் தாய்மை மொழி

தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும்
சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள்
இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால்
கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி

திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும்
தெய்வ புலவன் திருவள்ளுவரையும்
தேன்கவி புலவன் கம்பனையும்
வரமாக பெற்றிட்ட சிறப்பு மொழி

தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்
மலேயா சிங்கை மொரிசு பிஜு
என புலம்பெயர்ந்த பன்னாட்டில்
தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி

கணிணியுகத்தில் தடம் பதித்து
அறிவியியல் மொழியாய் பரிணாமித்து
இணையத்திலும் புதுமை புரட்சி செய்து
நாளும் உயரும் நம் தாய் தமிழ் மொழி


தமிழ் மாதங்கள்  

தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும்
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவபடுத்த உதவிடும்
ஐப்பசி மழை அடை மழை
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு
ஒளிரிந்திட நமைகள் குடி புகுந்திடும்
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்

திருக்குறள்  

இருவரிகளில் - ஓர்
இலக்கிய இமயம்
அறம் பொருள் இன்பம் - என
வகுத்த வாழ்வியல் காவியம்

இவ்விகம் ஒன்றே - இங்கே
வாழ்ந்திடும் யாவரும் ஒன்றே
நீதியும் ஒன்றென என்றே போற்றிடும்
உலக பொதுமறை இதுவன்றோ


பொருள் ஈட்டி வாழ் - இல்லாருக்கு
ஈகை செய்திடுக இல்லறம் துறவறம்
பொருள்படவாழ்ந்திடுக - என
உண்மைதனை சாற்றிடும் அற நூல்

கற்றலில் மானிடர் உயர்ந்திடுக - நீவிர்
கல்லாமை கயமை கலைந்திடுக
முயற்சிதனில் என்றும் வென்றிடுக - என்றே
கல்வி பாடும் திருநூல் திருக்குறள்

வான் புகழ் வள்ளுவன் வடித்தெடுத்த
தேன்தமிழ் தெவிட்டாத திரவியம் - காலம்
வாழும் வரை மாந்தருக்கு வழிகாட்டும் - என்றுமே
இப்புகழ்நூல் பூமிதனில் நின்றிடும்

தமிழர் திருநாள்

தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பெருநாள் - அதுவே
தரணி வாழ் தமிழரின் திருநாள்
அறுவடையின் ஆண்டவரை வணங்கி
உழைத்திட்ட உழவர் பெருமக்களை வாழ்த்தி
வளமைதனை நல்கிடும் இயற்கையை போற்றி
புத்தரிசியில் சர்க்கரை பால் பொங்கலிட்டு
தித்திக்கும் தேன்கரும்பு சுவைத்தே
மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

சாதி சமய எல்லைகளை கடந்து - தமிழ்
இரத்தங்கள் என்ற உணர்வில் கலந்து
இனம் காக்க இன்பத்தமிழ் காக்க
இவ்விகம் வாழ் தமிழர் நலன் காக்க
இதயங்கள் இணைய தோள்கொடுப்போம்
பாரெங்கும் பசுந்தமிழை பறைசாற்றி
நாளும் நற்றமிழ் வளர்த்து - நல்லவர்
தமிழரே என்ற பண்பினை சாற்றிடிட்டு
மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

உண்மை சொல்லெடுத்து நாவிற்கு வலிமைதந்து
ஆற்றல்மிகு திறமைதனில் நம்பிக்கைகொண்டு
நாளும் பொழுதும் முயற்சியில் வளர்ச்சிக்கண்டு
உழைப்பின் உயர்வில் முழுநிறைவுக்கண்டு
வானம்வரை எழும்பட்டும் தமிழ் சமூகம்
அவர்தம் புகழ் திக்கட்டும் ஒலிக்கட்டும்
வாழட்டும் தமிழர்யென்று வையகம் வாழ்த்திட
மகிழ்ச்சி கூவலிடுவோம் பொங்கலோ பொங்கல்!

அருந்தமிழ் அருவியில் ஒரு கவிகுளியல்

கவிபாடும் தோழமை நெஞ்சங்களே
தமிழ் புகழ்பாடும் என் அன்பு சொந்தங்களே
தமிழ் மன்றத்தில் இணைந்த இதயங்களே
புதிய சிந்தனை வடித்து - அதை
தேன்தமிழில் தெவிட்டாமல் படைத்தது
பாரெங்கும் வழங்கிடும் வள்ளல்களே
அன்பு அமைதி மகிழ்ச்சியில் புத்துலகம்
அமைத்திட எழுத்தில் ஏற்றம் தரும் - என்
அன்பு நண்பர்களே கவிஞர் பெருமக்களே

உங்களில் ஒருவனாய் அடியேனும் இணைந்து
தமிழ் பணியாற்றிட தமிழ் கவி பாடிட
புது கவிஞனாய் பரிணாமம் எடுக்க
ஆயிரம் ஆசைகள் சிறகடிக்க - உங்கள் . தைனிஸ்
பாச உறவுகளின் கவி கூடுகள் தேடி வந்துள்ளேன்
கவி மழையில் நனைந்து அருந்தமிழ் அருவியாய் கொட்டி
பசுமை போர்த்திய ஆறாய் கவிச்சிந்தனை விரிந்து
ஆழ்கடல் செந்தமிழில் மூழ்கி நற்கவி முத்தெடுத்து
முத்தமிழ் சாற்றிடும் தாய்த்தமிழுக்கு முடிசூடிட
விரும்பி மகிழ்ந்து விழைகின்றேன் - என்றும்
தமிழ்புகழ் பாடிடவே துடிக்கின்றேன்.